Pages

Friday, July 22, 2011

எகிப்துப் புரட்சி (பகுதி 2) - எஸ்.வி.ராஜதுரை


டுனீஷியாவில் நடந்த மக்கள் கிளர்ச்சிகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியதைப் போல ஒபாமா அரசாங்கத்தால், எகிப்திய மக்களின் போராட்டத்தை ஆதரிக்க முடியவில்லை. எனினும், மக்கள் எழுச்சி நாடு தழுவிய போராட்டமாக மாறத் தொடங்கியதுடன், அவர்கள்  முபாரக்கை மட்டுமல்ல, எகிப்தின் அரசியல் அமைப்பு முழுவதையுமே எதிர்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்ட ஒபாமா, வழக்கமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் கையாளும் சூழ்ச்சிகளில் இறங்கத் தொடங்கினார்.
அதாவது சம்பந்தப்பட்ட நாடுகளில் அமெரிக்காவால் ஆட்சிப்பொறுப்புகளில் அமர்த்தப்பட்ட கைப்பாவைகள் மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும்போது கையாளப்படும் உத்திதான் அது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள், மத்திய அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசில் மிகக் கொடூரமான ஆட்சி செய்துவந்த ட்ரூயில்லோ என்னும்  கொடுங்கோலனை முப்பது ஆண்டுகள் ஆதரித்து வந்தனர். 1950களில் தென் வியத்நாமில் டையெம் என்னும் சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்தினர். சொந்தநாட்டு மக்கள் மீதே பயங்கரவாத ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட ஸொமோஸோ குடும்பத்தைச் சேர்ந்த இரு தலைமுறைத் தலைவர்களை நிகராகுவாவில் ஆட்சியில் வைத்திருந்தனர். 1952இலும் 1954இலும் முறையே கியுபாவிலும்  பிரேசிலிலும் எதிர்ப்புரட்சி இராணுவத் தளபதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நிதி உதவி செய்தனர். 1973இல் சிலியில் சால்வடோர் அஜெண்டேவின் சோசலிஸ்ட் ஆட்சியைக் கவிழ்த்து, பினோஷேவின் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவினர்.1976இல் அர்ஜெண்டினாவிலும் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தனர்.

இத்தகைய சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கிளர்த்தெழும்போது அமெரிக்க ஆட்சியாளர்கள்  கீழ்க்காணும் மும்முனை உத்திகளைக் கடைப்பிடிக்கின்றனர்: அந்த நாடுகளில்  மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் அங்கு ஜனநாயக சீர்திருத்தம் வேண்டும் என்றும் அரசியல்ரீதியான பகிரங்க அறிக்கை விடுப்பது; ஏற்கனவே  இருக்கிற ஆட்சியாளருக்குத் தொடர்ந்து ஆதரவு தருவதாக அவருக்கு அந்தரங் கமாகத் தெரிவிப்பது; ஏற்கனவே உள்ள ஆட்சிமுறையும் பொருளாதார அமைப்பும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களும் பாதுகாக்கப்பட, ஆட்சி செய்யும் நபரை மாற்றி விட்டு அவருக்குப் பதிலாக  நம்பகமான இன்னொருவரைக் கொண்டுவருவது, தேவைப்பட்டால் தனது கைப்பாவைகளைக் கொலை செய்வது (ட்ரூயில்லோ, டையெம்), வெளிநாடுகளில் அவர்கள் தஞ்சம் புகவைப்பது (ஸொமோஸோ, பாட்டிஸ்டா), மற்றவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு  செய்வது (பினோஷெ) ஆகியவற்றையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்கிறது).

இந்த மும்முனை உத்தியைத்தான் அமெரிக்கா எகிப்திலும் கடைப்பிடித்தது. முதல் எட்டு நாள்கள், அமெரிக்க அரசாங்கம், முபாரக்கிற்கு எதிராக எந்தச் சொல்லையும் பேசவில்லை. எகிப்தின் கதவுகளை  பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது, அமெரிக்கா விரும்பிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைச் சாதித்துக் காட்டுவது, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சூயஸ் கால்வாய்க்குள் சுமூகமாகப் போய் வருவதை உத்திரவாதம் செய்வது, ‘உலக பயங்கரவாதத்துக்கு எதிராக' அமெரிக்கா  நடத்தும் போருக்கு ஒத்துழைப்புத் தருவது என்னும் பெயரால் சிஐஏவால் கடத்திச் செல்லப்படும்இஸ்லாமிய தீவிரவாதிகளை' விசாரணை (சித்திரவதை) செய் வது, இஸ்ரேலின் விசுவாசியாக இருப்பது, காஸா பகுதிக்குள் இருந்து எகிப்துக்குள் பாலஸ்தீனர்கள் நுழையமுடியாதபடி தடுக்க மணலுக்குள் புதைந்திருக்கும் நெடுஞ்சுவர்களைக் கட்டுவது, இஸ்ரேலுக்கு மலிவு விலையில் இயற்கை வாயுவை விற்பது, இரானின் முன்னணி அமைப்புகள் எனச் சொல்லப்படும் ஹமாஸ், ஹிஸ்பொல்லா ஆகியவற்றின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்துவது - ஆகியவற்றை முபாரக் செய்து வந்ததால் அவரது சர்வாதிகார அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 1.3 பில்லியன் டாலர் அமெரிக்கஇராணுவ உதவி' தடையில்லா மல் வந்து கொண்டிருந்தது.


பிப்ரவரி 1ஆம் தேதிதான், சுமுகமான ஆட்சி மாற்றம் வேண்டும் எனக் கூறத் தொடங்கியது அமெரிக்கா. கூடவே, முபாரக்கின் நெருக்கமான கூட்டாளியும் எகிப்தின் உளவுத்துறைத் தலைவருமான ஒமர் சுலைமானை, நீண்டகாலம் நிரப்பப்படாமல் இருந்த துணைக் குடியரசுப் பதவிக்குக் கொண்டு வந்தது. முபாரக்கைப் போலவே, எகிப்திய இராணுவத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஒமர், எகிப்தியப் போராட்டக்காரர்களின் அனுதாபி போல நடிக்கத் தொடங்கி னார். எனினும் முபாரக்கின் கையாட்களும், சிவில் உடையில் வந்த போலிஸ்காரர்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தியவர்கள்மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மாறாக, அமைதிவழிப் போராட்டக்காரர் கள் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தவும், ஏராளமான பத்திரிகையாளர்களும் மனிதஉரிமைப் போராளிகளும் கைது செய்யப்படவும் காரணமாக இருந்தார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை முற்றுகையிட்டு, அங்குள்ள மக்கள் பட்டினியால் சாக வேண்டும் என விரும்பிய இஸ்ரேலின் நடவடிக்கை களுக்கு முபாரக்குடன் சேர்ந்து முழு ஒத்துழைப்புத் தந்தவரும், காஸா பகுதியில் நடப்பது குறித்து உளவு பார்த்து இஸ்ரேலிய இராணுவத்திற்குத் தேவையான தகவல்களைத் திரட்டித் தந்தவரும்தான் ஒமர். சூடானிலிருந்து காஸா பகுதிக்கு ஆயுதங்கள் கடத்தி வருவதைத் தடுப்பது, இஸ்ரேலியப் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய்க்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிப்பது, பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையைக் கட்டுப்படுத்தும் அல்-ஃபத்தா இயக்கத்திற்கும் காஸாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்குமி டையே உள்ள பகைமையை உக்கிரமாக்க அனைத்தையும் செய்வது என்பனவற்றில் முபாரக்கும் ஒமரும் கூட்டாகப் பணியாற்றினர். இராக்கில்பேரழிவு உண்டாக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன' என்று ஜார்ஜ் புஷ்ஷும் டோனி ப்ளேயரும் விரும்பியசாட்சியத்தை', சிஐஏவால் கைது செய்யப்பட்டுத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதியொருவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து அவரிடம் கறந்து அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்களுக்குத் தந்தவர் ஒமர். அந்தஆவணத்தை' .நா.பாதுகாப்பு அவையிடம் காட்டித்தான், இராக் மீதான தனது போருக்கு நியாயம் கற்பிக்க முனைந்தது அமெரிக்கா.


2011பிப்ரவரி 3ஆம் தேதி கெய்ரோ தொலைக்காட்சியில் தோன்றிய ஒமர், எகிப்தில் குழப்பம் ஏற்படுவதைத் தடுக் கும் கடமை தனக்கு இருப்பதாகவும், கிளர்ச்சிகளைத் தூண்டி விடுவதுஅல் ஜஸீரா' தொலைக்காட்சியும், ஹமாஸ்ஹிஸ் பொல்லா, இரான் ஆகியவையுமே என்றும், மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், கிளர்ச்சியாளர்கள் நடத்திய வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் எகிப்திய மக்களை அச்சுறுத்தினார். தங்கள் மீது வெடிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளிலிருந்து தங்களது பேரணிகளை வானத்திலிருந்து கண்காணிக்கும் எஃப்-16 ரக விமானங்கள் வரை எல்லாமேஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை' என முழங்கிய மக்கள், தங்களது போராட்டத்தின் குறியிலக்கு முபாரக் போன்ற தனிநபர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நலன்களைப் பாதுகாக்கும் எகிப்திய ஆட்சியாளர்கள் அனைவரும்தாம் என்பதைத் தெளிவுபடுத்தினர்.

அதனால்தான், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வரை பதவி விலகமாட்டேன் என அடம் பிடித்து வந்த முபாரக்கை, அமெரிக்கா அடுத்தநாளே பதவி விலகும்படி செய்தது. முபாரக் பதவி விலகியது உண்மையிலேயே அரபு மக்கள் மட்டு மல்ல, உலகமக்கள் அனைவருமே கொண்டாடத்தக்க நிகழ்ச்சிதான். அவர் எகிப்திலிருந்து கொள்ளையடித்த ஏறத்தாழ 40 மில்லியன் டாலர் சொத்துகளை அவரிடமிருந்து கைப்பற்றி அதை எகிப்தின் கருவூலங்களில் மக்கள் சேர்ப்பார்களேயானால், அது அரபு உலகத்தில் நடந்த முன்னுவமை இல்லாத நிகழ்ச்சியாகக் கருதப்படும்

முபாரக்கின் வீழ்ச்சியுடன் மக்கள் திருப்தியடைய வில்லை. ஒமருக்கும் இனி நாட்டில் வேலையில்லை என முழங்கத் தொடங்கினர். ஆயுதமேந்தாமல், கெய்ரோவின் தாஹிர் (விடுதலை) சதுக்கத்திலும் பிற   நகரத் தெருக்களிலும் திரண்டிருந்த மக்கள்மீது ஹெலிகாப்டர்களையும் துப்பாக்கிகளையும் கவச வண்டிகளையும் கொண்டு தாக்குதல் தொடுப்பதற்கு உசிதமான நேரம் வரவில்லை என்று எகிப்திய ஆட்சி யாளர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் கருதியிருப்பார்கள் போலும். ஒருவேளை அத்தகைய இராணுவ வன்முறை தொடங்கப்படுமேயானால், இராணுவத்திற்குள்ளேயே பிளவு ஏற்படும் சாத்தியப்பாட்டையும் அவர்கள் கருத்தில் கொண்டிருக்கலாம். ஏனெனில், கடந்த மூன்றுவாரங்களாகவேஎகிப்திய இராணுவத்தைச் சேர்ந்த சாதாரணப் படைவீரர்கள் மட்டுமின்றி, இளநிலை அதிகாரிகளும் தெருக்களில் இறங்கிப் போராடும் மக்களுக்கு ஆதரவாக நின்றனர். அந்தக் குடிமக்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் அவர்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்காலிக ஏற்பாடாக முபாரக்கைப் பதவி விலகச் செய்ததுடன், மக்களால் வெறுக்கப்படும் ஒமர் சுலைமானையும்  சற்று ஒதுங்கி நிற்கச் செய்துவிட்டு, இராணுவக் கவுன்சிலை நாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்குமாறு செய்திருக்கிறது. அதாவது முபாரக் இல்லாத முபாரக்கிசத்தைக் கொண்டு வந்திருக்கிறது. எகிப்தின் வரலாற்றை எடுத்துக் கொள்வோமேயானால், 1952 முதலே நாட்டில் அதிகாரத்தைச் செலுத்துவதில் எகிப்திய இராணுவமே முதன்மைச் சக்தியாக இருந்து வந்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்டிருந்த அரபு தேசியவாதிகளான நாஸர் ஆட்சிக்காலமானாலும் சரி, அவரது ஆட்சிக்குப் பின் அமெரிக்க- இஸ்ரேலிய அடிவருடிக் கொள்கையைத் தொடங்கிவைத்த அன்வர் சதாத் முதல் முபாரக் வரையிலான காலமானாலும் சரி இதுதான் உண்மை. முபாரக் ஆட்சிக்காலத்தில் உயர் இராணுவ அதிகாரிகளுக்குக் கொழுத்த ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட்டது மட்டுமல்ல; அமெரிக்காவின் இராணுவ- தொழிலுற்பத்தித்துறை இணைப்பு (Military Industrial complex) போலவே, எகிப்திய இராணுவமும் முக்கிய தொழிலுற்பத்திகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இராணுவ உபகரணங்களை மட்டுமல்லாது மக்களின் நுகர்பொருள்கள், யந்திரங்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் நடத்தி வருகின்றது. எகிப்திய முதலாளி வர்க்கத்தின் பகுதியே இராணுவத்திலுள்ள உயர் நிலை அதிகாரிகள். எனவே, நாட்டின் அரசியலில், பொருளாதாரத்தில் தமக்குள்ள கட்டுப்பாட்டை அவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடமாட்டார்கள்.

சில மாதங்களுக்குள் எகிப்தில்  ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பு ஏற்கும்வரை, அதாவதுஆட்சி மாற்றம்' ஏற்படும் வரை,' இடைக்கால நிர்வாகத்'தைத்தான் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே போராடும் மக்கள் தத்தம் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்தஇடைக்கால நிர்வாக'த்தைச் சேர்ந்தவர்களும் முபாரக்கின் நெருக்கமான கூட்டாளிகளுமான இராணுவக் கவுன்ஸிலைச் சேர்ந்தவர்கள்  கூறியுள்ளனர். எகிப்தில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு இந்தியா உதவ வேண்டும் என ஹில்லாரி கிளிண்டன் கூற, எகிப்து அரசாங்கத்திடமிருந்து  வேண்டுகோள் வந்தால், அதைப் பரிசீலிப்போம் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக (அல்லது முதல்படியாக) உள்ள ஜனநாயக நாடு இந்தியாதானே! டுனீஷியாவில் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்துள்ள மெபொஸாவும், அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ள டுனீஷிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிகளோ, அவ்வாறே எகிப்தின் இடைக்கால நிர்வாகத்தை எடுத்துக் கொண்டுள்ள இராணுவத் தளபதிகளும் மக்களால் தேர்ந் தெடுக்கப்படாதவர்களே. மக்களின் விரோதிகளே. டுனீஷியாவில்சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்' என்னும் பெயரால் இராணுவம் ஏற்கனவே அணிதிரட்டப்பட்டுள்ளது மட்டுமின்றி சேமப்படைகளும் (Reservists) திரட்டப்படுகின்றனவோ, அதேபோல, எகிப்திலும் இராணுவத் தளபதிபதிகள் இராணுவ ஒடுக்குமுறைக்குத் தயாராகி வருகின்றனர். ஒருவேளை அங்கு வெற்றிகரமான புரட்சி நடைபெறுமானால், அதை நசுக்குவதற்காக மத்தியதரைக்கடல் பகுதியில் நேட்டோ போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.

இலட்சக்கணக்கில் தெருக்களில் இறங்கிப் போராடி வந்த எகிப்திய மக்களை ஒழுங்கமைத்து நடத்திச் செல்லும் அரசியல் அமைப்புகள் ஏதும் இல்லாததால், முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து வந்த முஸ்லிம் சகோதரத்துவம் போன்றவை, ஒமர் சுலைமானிடமும் இராணுவத் தளபதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை எல்-பராடெயிடம் கொடுத்திருந்தன. தற்போது, நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க  இன்னும் சிலஅரசியல் விவேகிகள்' -மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, ஆனால் மக்கள் பிரதிநிதிகள் எனத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொள்கிறவர்கள்- தோன்றியிருக்கிறார்கள். அவர்களிலொருவர் அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அமிர் மூஸ்ஸா. அரபு நாடுகளின் சுயகௌரவத்தை விற்பனை செய்துவந்த அமைப்பு இது. அவருக்குள்ள ஒரே ஆசை, எதிர்கால எகிப்து அமைச்சரவையில் இடம் பெறுவதுதான். மத்தியக்கிழக்கு நாடுகளில் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளரான நகிப் சாவ்ரிஸ், இன்னொருமக்கள் பிரதிநிதி'யாவார்! எதிர்கால எகிப்தில் இன்னும் வலுவான நவ-தாராளவாத முதலாளியப் பொருளாதாரம் தழைத்தோங்கும் என்பது இவரது நம்பிக்கை. ‘கூகிள்' (google) போன்ற இணையதளங்கள் மூலம் மக்களைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றிய சிலரும், மக்களை வீட்டுக்குப் போகும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

டுனீஷியாவிலும் எகிப்திலும்அரசியல் மாற்றம்' ஏற்படுத்துவது குறித்த அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் திட்டம், மூன்று குறிக்கோள்களைப் பூர்த்தி செய்வதற்காகக் கால அவகாசம் திரட்டுவதுதான்:1. மக்களின் போராட்ட உணர்வையும் அதன் தீவிரத்தையும் சிறிதுசிறிதாக மழுங்கடித்து, நாளடைவில் அவர்களது ஜனநாயகக் கோரிக்கைகளை முறியடிப்பது; 2.எந்தவொரு ஜனநாயக அரசியல் முறையையும் சீர்குலைக்கக்கூடிய நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளைப் பேணிப் பாதுகாத்து வெளிநாட்டுக் கடன்கள் நாட்டைத் தமது இறுக்கமான பிடிக்குள் வைத்திருப்பதை உறுதி செய்வது; 3.எதிர்ப்புரட்சிக்கான ஆயத்தங்களைச் செய்வது.

ஏகாதிபத்தியச் சங்கிலியில் உள்ள மிகப் பலகீனமான கண்ணி ரஷியா என்றும், அதை உடைப்பது  ஒப்பீட்டு நோக்கில் எளிது என்றும். ரஷியப்புரட்சி மேற்கு ஐரோப்பிய நாடுகளின் புரட்சியைத் தூண்டிவிடும் என்றும் லெனின் கூறினார். அரபு உலகிலோ ஏகாதிபத்திய வலைப்பின்னலில் மிக வலுவான கண்ணியாக இருப்பது எகிப்துதான். டுனீஷியா போன்றவை, விளிம்பு நாடுகள்தான் (டுனீஷியாவில் எண்ணெய் வளம் இல்லை). எகிப்தில் ஏகாதிபத்தியத்துக்கு விழும் பலத்த அடி, அரபு உலகம் முழுவதிலும் வட ஆப்பிரிக்கா முழுவதிலும், ஏன் உலகம் முழுவதிலும் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, இந்த நிலை உருவாவதைத் தடுக்க அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் இஸ்ரேலிய ஜியோனிஸ்டுகளும் அரபு நாட்டுப் பிற்போக்கு ஆட்சியாளர்களும் அனைத்தையும் செய்வர். இது அவர்களுக்கு ஜீவ மரணப் போராட்டம்.

 எதிர்ப்புரட்சி நடக்காமல் தடுப்பதற்கும், அரபு நாடு களில் தோன்றியுள்ள மக்கள் போராட்டங்கள்  அடிப்படை யான சமூக மாற்றத்திற்கான புரட்சியாக வளர்ச்சியடைவதற்கும் துணைபுரியக் கூடிய சக்திகளும் அங்கு - குறிப்பாக எகிப்தில்- இருக்கின்றன. அவை, மொழி, இனம், நாட்டெல்லைகள் கடந்த சர்வதேசப் பாட்டாளிவர்க்க அமைப்பைக் கட்டுமேயானால், ஜனநாயகப்புரட்சியும் அதனைத் தொடர்ந்து சோசலிசப் புரட்சியும் நடப்பதற்கான சாத்தியப்பாடு ஏற்படலாம். எகிப்தின் ஒழுங்கமைக்கப்பட்ட  தொழிலாளி வர்க்கம், மிகக் கொடூரமான ஒடுக்குமுறை நாள்களிலேயே, தனது உரிமைகளுக்காகத் தொடர்ந்து பல்வேறு வகைப் போராட்டங்களை நடத்தி வந்துள் ளது. இந்தப் பாட்டாளி வர்க்கம், மேற்சொன்ன சர்வதேசக் கடமையைச் செய்ய வேண்டும். அது, எகிப்தியக் கிளர்ச்சியாளர்களுடன் தோளோடு தோள் நின்று, பொருளாதாரக் கோரிக்கைகளுடன் முற்போக்கான அரசியல் கோரிக்கை களையும் முன்வைத்து வந்ததுடன், பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றது. இராணுவத்தால் நடத்தப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளும் இதில் அடங்குவர். இரண்டாவது சக்தி எகிப்திய இளம் மக்கள்.


இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும் தொழிலாளிகளும் அரபு உலகத்தின் புகழ்பெற்ற கவிஞர்களிலொருவரான நிஸார் கப்பானி எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே நமது ஆசை: 1967இல் அரபு நாடுகள் இஸ்ரேலிடம் தோல்வி கண்ட பிறகு அரபு உலகம் முழுவதிலுமே  தோல்வி மனப்பான்மையும் விரக்தி உணர்வும் மேலோங்கியிருந்த காலத்தில் கப்பானி  எழுதினார்:

                அரபுக் குழந்தைகளே
                எதிர்காலத்தின் தானியக்கதிர்களே
                நீங்கள் எங்கள் சங்கிலிகளை உடைப்பீர்கள்
                எங்கள் தலைகளில் உள்ள அபினியைக் கொல்வீர்கள்
                பிரமைகளைக் கொல்வீர்கள்.
                அரபுக் குழந்தைகளே
                மூச்சுத்திணறச் செய்யப்பட்ட
                எங்கள் தலைமுறையைப் பற்றிப் படிக்காதீர்கள்
                நாங்கள் வீணாகிப் போனவர்கள்
                தர்பூசிணிப் பழ ஓட்டைப் போல
                எதற்கும் பயன்படாதவர்கள்
                எங்களைப் பற்றிப் படிக்காதீர்கள்
                எங்களை நகல் செய்யாதீர்கள்
                எங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள்
                எங்கள் கருத்துகளை ஒப்புக் கொள்ளாதீர்கள்
                நாங்கள் மோசடிக்காரர்களும்
                செப்பிடுவித்தைக்காரர்களுமடங்கிய கூட்டம்
                அரபுக் குழந்தைகளே
                வசந்தகால மாரிகளே
                எதிர்காலத்தின் தானியக் கதிர்களே
                தோல்வியை வெல்லப் போகும்
                தலைமுறையினர் நீங்கள்.

0 comments:

Post a Comment

இனிதே துவங்கி உள்ளது. வாழ்த்துக்கள்