Pages

Friday, July 22, 2011

எகிப்தியப் புரட்சி (பகுதி 1) - எஸ்.வி.ராஜதுரை

சண்டை முடிந்துவிட்டது
என நீ சொல்கிறாய்
சண்டை இன்னும் தொடங்கவே இல்லை
என்னும் போதிலும்
களத்தில் யாரும் இறங்கவில்லை
 நாமும் சரி, பகைவனும் சரி
கோடுகள் கிழிக்கப்படவில்லை
சிதறிக் கிடக்கும் தோழர்களை
அழைக்கவோ,
எதிரியின் இருப்பிடத்தைச் சொல்லவோ
கொடி இன்னும் ஏற்றப்படவில்லை.
சண்டை முடிந்துவிட்டது
 என நீ சொல்கிறாய்
சண்டை போட நாம் இன்னும்
தொடங்கவே இல்லை என்னும் போதிலும்..

- ஃபெய்ஸ் அஹ்மது ஃபெய்ஸ்


அடிப்படையான சமூகப்புரட்சி நடக்க வேண்டுமானால் இரு நிலைமைகள் கனிந்திருக்க வேண்டும் என்றார் லெனின்: 1.ஒடுக்கப்பட்டும், சுரண்டப்படும் மக்கள் இனி ஒருபோதும் அந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்; 2.ஆளும் வர்க்கங்களும் சக்திகளும் இனி பழையமுறைகளில்  ஆள்வது சாத்தியமில்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.1917ஆம் ஆண்டு ரஷிய போல்ஷ்விக் புரட்சி நடப்பதற்கு ஜார் ரஷியாவில் இந்த இரு நிலைமைகளும் இருந்தன. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே நடக்கும் போரை ரஷியாவில் உள்நாட்டுப் போராக மாற்றுவதன் மூலம் ரஷியப் புரட்சியைச் சாதித்தனர் போல்ஷ்விக்குகள்


ஆனால், புரட்சியை அதன் தொட்டிலிலேயே கழுத்தை நெரித்துக் கொல்வதற்கு 14 முதலாளிய நாடுகள் மேற்கொண்ட இராணுவத் தலையீடுகளை முறியடிப்பதற்காக போல்ஷ்விக்குகளும் ரஷியப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையும் பெரும் விலையைத் தரவேண்டியதாயிற்று. அது புரட்சியின் எதிர்காலத்தில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி, அதைச் சிதைவுக்குள்ளாக்கியது. ரஷியப் புரட்சியைப் பாதுகாத்து, அதை மேம்படுத்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் - லெனின் எதிர்பார்த்த புரட்சி - ஏதும் நடக்கவில்லை. கிழக்கு நாடுகள் மீது - குறிப்பாக ஆசிய நாடுகளான சீனா மீதும் இந்தியா மீதும் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர் லெனினும் அவரது தோழர்களும். ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் சீனா அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது. இந்தியா முதலாளிய வளர்ச்சிப்பாதையைச் தேர்ந்தெடுத்துக் கொண்டது. மாபெரும் ரஷியப்புரட்சியும் சீனப்புரட்சியும் முதலாளிய உலகில் ஏற்படுத்திய உடைப்புகள் காலப்போக்கில் சரிசெய்யப்பட்டன. ‘சோசலிச முகாம்' என்பதும்  மறைந்து போயிற்று. கியூபா, வெனிசூலா, பொலிவியா ஆகிய நாடுகளில் மட்டுமே இன் னும் சிறிது சோசலிச அடையாளங்கள் உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய  சின்னஞ்சிறு வியத்நாம், இன்று  அமெரிக்காவின் இராணுவக் கூட்டாளியாகிவிடத் துடிக்கின்றது. முதலாளியமும் ஏகாதிபத்தியமும் பல்வேறு பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை சமாளித்து, தமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.


2010டிசம்பர் மாதம் டுனீஷியாவின் நகரமொன்றில், வறுமையாலும் வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர்,  போலீசாரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகத்தான் தீக்குளித்துத் தனது உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்ச்சியே அந்த நகரத்தில் தொடங்கி தலைநகர் டூனிஸில் பேரலையாய்த் திரண்ட வெகுமக்கள் போராட்டங்களாகப் பரிணாமம் பெற்றது. முன்னாள் பிரெஞ்சுக் காலனியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவகாலனியாகவும்  இருந்த டுனீஷியாவில் 23ஆண்டுகளாகக் கொடுங்கோலாட்சி செய்தும், நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வந்ததோடு, குடும்ப ஆட்சியை நிறுவி நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்து வந்தவருமான  ஸினி அல-அபிதின் பென் அலியை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்த மக்கள் எழுச்சி, உடனடியாக அல்ஜீரியா, மொராக்கோ, சூடான், சிரியா, யேமன், ஜோர்டான், லிபியா, அமெரிக்க அடிவருடியான மொகமது அப்பாஸின் கட்டுப்பாட்டிலுள்ள பாலஸ்தீன மேற்குக்கரைப் பகுதி ஆகிய நாடுகளுக்கும் காட்டுத்தீ போல பரவியது. அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன்  அரபுநாடுகளின் ஆட்சியாளர்களின் அஸ்திவாரங்கள் மணலில் புதைந்து கொண்டிருக்கின்றன' என அச்சம் தெரிவித்தார். மிக நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் அந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் பீதியடைந்து அவசர அவசரமாகச் சில மேம்போக்கான பொருளாதாரச சலுகைகளை அறிவித்தனர். எனினும், இப்போதும்கூட அரபு நாடுகள் பலவற்றில்- பஹ்ரெய்ன் உட்பட- பொருளாதார, அரசியல் கோரிக்கைகளை முன்நிறுத்தி வெகுமக்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்ஸன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள எகிப்தில் நடக்கும் புரட்சி, ஷியா முஸ்லிம்களின் இரானில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. 2011 பிப்ரவரி 14இல் டெஹ்ரானில் எகிப்தியப் புரட்சிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மக்கள் பேரணிகள் மீது இரானியப் போலிஸார் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் என்றும் அதைத் தூண்டிவிட்ட எதிர்க் கட்சியினர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். கடந்த 2009இல் நடந்த அதிபர் தேர்தலின் போது இரானிய வலதுசாரிச் சக்திகள் சிலவற்றுக்கு அமெரிக்காவும் மேற்குநாடுகளும் தந்து வந்த ஆதரவின் காரணமாக நடந்த ஆர்ப்பாட்டங்களைப் போன்றதுதான் எகிப்துப் புரட்சிக்கு ஆதரவு என்னும் பெயரில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும் என்று இரானிய அரசாங்கத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. எனினும், இன்றைய எகிப்துப் புரட்சியைப் போலவே மதச்சார்பற்ற புரட்சியாக 1979இல் வெடித்த இரானியப் புரட்சியின் வெற்றியின் கனிகளை அபகரித்து அங்கு மதவாத ஆட்சியை நிறுவியவர்களின் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.


பென் அலியைத் தூக்கியெறிய டுனீஷியா மக்கள் நடத்திய போராட்டத்தைஜனநாயக மாற்றத்துக்'கான போராட்டம் என பிரெஞ்சு, அமெரிக்க அதிபர்கள் ஸர்கோஸியும் ஒபாமாவும் பாராட்டினர். அண்மைக்காலம் வரை அந்த கொடுங்கோலன் பென் அலியைத் தமது நட்பு சக்தியாகக் கருதி வந்தவர்கள்தான் இவர்களிருவரும். ‘இஸ்லாமிய பயங்கரவாதிகள்' என அடையாளப்படுத்தி அமெரிக்க சிஐஏ ஏஜண்டுகளால் கடத்திச் செல்லப்படுபவர்களை விசாரணை என்னும் பெயரால் சித்திரவதை செய்யும் சிறப்பு முகாம்களை டுனீஷியாவின் பாலைவனப் பகுதிகளில் அமைக்க அமெரிக்காவுடன் ஒத்துழைத்தவர்தான் பென் அலி. அவர் தூக்கியெறியப்படுவதற்குச் சிலநாள்களுக்கு முன்புதான் அமெரிக்கா பென் அலியின் அரசாங்கத்திற்கு 12 மில்லியன் டாலர் கூடுதல் இராணுவ உதவி வழங்க முடிவு செய்திருந்தது!
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பென் அலியின் இலஞ்ச ஊழலாட்சி, மனித உரிமை மீறல்கள் என்பனவற்றுக்கு எதிரான போராட்டம், அடிப்படையான சமூக மாற்றத்திற்கான போராட்டமாக மாறுவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தவுடனேயே, ஒபாமாவும்  டுனீஷியாவின் உள் நாட்டுச் சக்திகளும் ஒன்றிணைந்துஆட்சி மாற்ற'த்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். அதாவது, சட்டரீதியாக அறிவிக்கப்படாத, ஆனால் நடைமுறையில் உள்ள இராணுவ ஆட்சியை உறுதி செய்யவும் அதேவேளைதேசிய ஒற்றுமைக்கான' அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக உறுதியளிப்பதுமே அந்த ஏற்பாடுகள். பென் அலியின்  நீண்டகால சகாவும் டுனீஷியப் பிரதமருமான மொஹமது கன்னூச்சி (mohammed ghannouchi) குடியரத்தலைவராக அதிகாரத்தைக் கைப்பற்றச் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை; அவருக்குப் பதிலாக பென்-அலி ஆட்சியின் போது டுனீஷிய நாடாளுமன்ற அவைத்தலைவராக இருந்தவரும் பென்-அலியின் மற்றொரு நெருக்கமான சகாவுமான  ஃபவுத் மெபாஸா (Fouad Mebazaa)  அந்தப் பதவியை பிடித்துக்கொண்டாலும், அவர் உடனடியாக, ‘அனைத்து டுனீஷிய மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை' அமைக்கும் பொறுப்பை மொஹமத் கன்னூச்சியிடம் ஒப்படைத்தார். 'தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை' உருவாக்கும் திட்டத்திற்கு முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தினதும் ஒப்புதல் கிடைத்தது. இவற்றில் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிறந்தஎட்டாஜ்' (புதுப்பித்தல்) கட்சியும், நீண்டகாலம் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த ரசெத் கன்னூச்சி என்பாரின் தலைமையிலுள்ள இஸ்லாமியக் கட்சியான என்னாஹ்டாவும் அடங்கும். அந்த இஸ்லாமியக் கட்சி, பென் அலி அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. டுனீஷியாவில் இஸ்லாமிய பயங்கரவாதச் சக்திகள் தலை தூக்காமல் செய்தவர் என்று பென் அலியை மேற்குநாடுகள் பாராட்டி வந்தன. உண்மையில் டுனீஷியக் குடிமைச் சமுதாயத்தில் இஸ்லாமியவாதம் என்றுமே பலமான சக்தியாக இருந்த தில்லை. 'தேசிய ஒற்றுமை அரசாங்கம்' ஏற்படுத்தும் திட்டத்தை ஆதரிக்கும் ரசெத் கன்னூச்சி, ‘டுனீஷியாவின் அனைத்துத்தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த அரசாங்கத்தில்  கம்யூனிஸ்டுகளும் இடம் பெறவேண்டும் என்றும் தனது இஸ்லாமியக் கட்சிக்கு மட்டும் கூடுதலான சலுகை கேட்பது அதர்மமானது என்றும் பேசியதை சில இடதுசாரிகளும்கூடப் பாராட்டியுள்ளனர்!


மக்களின்  கோபாவேசத்தைத் தணிக்க சில மேம்போக் கான மாற்றங்கள் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக, பென்-அலி அரசாங்கத்தின் இரகசியப் போலிஸ் துறையின் தலைவராக இருந்த அலி சீரியாட்டி என்பவர் கைது செய்யப்பட்டு, வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். போலிஸ் துறைக்கும் இரகசியப் போலிஸ் துறைக்கும் கொடுத்து வந்த சலுகைகளையும் ஆதரவையும் பென் -அலி இராணுவத் திற்குக் கொடுக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே, ஏறத் தாழ இரண்டுமாத காலம் நடந்த டுனீஷிய மக்கள் போராட்டத் தின்போது, அது மக்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டது என்றும் ஆளும் வர்க்கச் சார்புடைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. ஆனால், இன்று டுனீஷிய முதலாளி வர்க்கத்தையும் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களையும் பாதுகாக்கும் சக்தியாக, அடித்தட்டு மக்களிடமிருந்து வரும் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகத் தனது துப்பாக்கிகளையும் டாங்கிகளையும் தயாராக வைத்துள்ளது அந்த இராணுவம். நாட்டின் தலைநகர் டூனிஸில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முக்கிய கட்டடங்களை இராணுவத்துருப்புகளும் ஹெலிகாப்டர்களும் பாதுகாக்கின்றன.


டுனீஷியாவில் ஏற்பட்டுள்ள இந்தஆட்சி மாற்றம்' பிற்போக்குத்தனமான அரபு நாட்டு அரசாங்கங்கள் அனைத்துக்கும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது. டுனீஷியாவில் கொள்ளையடித்த செல்வங்களுடன் சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ள பென் அலியின் நிலை கண்டு வெளிப்படையாகக் கண்ணீர் சிந்தியவர் லிபியாவை 30 ஆண்டு களுக்கும் மேலாக ஆண்டு வரும் 'அரபு தேசியவாதி'யான கடாஃபி மட்டுமே. இவர் இத்தாலிய பாசிஸ்ட் பிரதமர் பெர்லுஸ்கோனியின் நெருக்கமான நண்பர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்ஸோலினியின் பாசிஸ்ட் படைகள் லிபியாவை ஆக்கிரமித்தபோது, அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய ஒமர் முக்தரின் மரபில் வந்தவன் நான் எனத் தம்பட்டம் அடித்துக்கொண்ட கடாஃபி, இன்று அதே முஸ்ஸோலினியைத் தனது இலட்சியத் தலைவனாகக் கொண்டாடும் பெர்லுஸ்கோனியின் உற்ற நண்பராகத் திகழ்கிறார்.


எனினும், அரபு நாடுகளில் இஸ்லாமியவாதிகளைத் தவிர, அதாவது மதத்தின் பெயராலன்றி, வேறு எந்தவகையிலும் பெருமளவில் மக்களைத் திரட்ட முடியாது, அங்கு தோன் றும் எந்தவொரு அரசியல் இயக்கமும் மதவாதத் தன்மையைத்தான் கொண்டிருக்கும் என்று பொதுமைப்படுத்திப் பேசி வந்தவர்களின் கூற்றுகளைப் பொய்ப்பிக்கும் வண்ணமே டுனீஷிய மக்கள் எழுச்சி இருந்தது. அதேபோல, அரபு நாடுகளில் எந்த விதமான இஸ்லாமிய சக்தியும் தலைதூக்கவிடாமல் இருப்பது, அங்கு ஸ்திரத்தனமையை உறுதிப்படுத்துவதற்கு அவசியம் என்று கூறிவந்த அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்  அடிப்படையான அரசியல் சமூக மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த, தேவைப்பட்டால் இஸ்லாமியக் கட்சிகளையும் சக்திகளையும் ஆதரிக்கத் தயாராக உள்ளன. ‘நேட்டோ'வில் உறுப்பியம் வகிக்கும் துருக்கியில் சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியக் கட்சி பெரும் பான்மை பெற்று அரசாங்கத்தை அமைத்துள்ளதை அமெரிக் காவும் ஐரோப்பிய நாடுகளும்சகித்துக் கொள்கின்றன'.


டுனீஷியாவில் நடந்த மக்கள் போராட்டங்கள் வேறு வட ஆப்பிரிக்க, அரபு நாடுகளில்  மக்களின் எழுச்சியைத் தூண்டிவிட்டபோதிலும், குறிப்பாக அரபு உலகிலும் பொதுவாக உலக அளவிலும் பாரதூரமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகளை உடையதாக இருந்தது (தொடர்ந்து அப்படி இருக்கவேண்டும் என்பது நமது விருப்பம்) எகிப்தியப் புரட்சியே. எகிப்து புரட்சிகரமான நாடு அல்ல என்றும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே ஃபரோவாக்கள் போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சிகளுக்குப் பழகிப் போனவர்களே எகிப்தியர்கள் என்றும்புகழ்பெற்ற' சமூகவியலாளர்கள் கூறி வந்ததையும், எகிப்தில் புரட்சி தோன்றுமானால், அதுஇஸ்லாமியப் புரட்சி'யாகத்தான் இருக்கும் என்றும் கூறிவந்த மேனாட்டு ஆராய்ச்சியாளர்களை வெட்கித் தலைகுனிய வைக்கும் வகையில் கடந்த ஜனவரி இறுதியில் முதலில் கெய்ரோவிலும் பிறகு எகிப்தின் முக்கிய நகரங்களிலும் வெடித்த மக்களின் எழுச்சி - முஸ்லிம்கள், கோப்டிக் கிறிஸ்துவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நடுத்தர வர்க்கத்தினர், நீதிபதிகள், மாணவர்கள், பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒருபகுதியினர், எல்லோருக்கும் மேலாகத் தொழிலாளிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டுவந்து எகிப்தில் 30 ஆண்டுகளாகக் கொடுங்கோலாட்சி செய்துவந்த 82 வயதுக்கிழவர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராகத் தொடங்கியப் போராட்டம்- நவீன அராபிய வரலாற்றில் முன்னுவமையற்றதாகும்.


எவ்வாறு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அரபு தேசிய வாதம் 1950களில் எகிப்திலிருந்து பிற அரபு நாடுகளுக்குப் பரவியதோ, அவ்வாறே 1967இல் எகிப்தும் பிற அரபு நாடுகளும் இஸ்ரேலிடம் அடைந்த தோல்வியும் அரபு தேசியவாதிகளின் ஒடுக்குமுறைப் போக்கும் அதே எகிப்திலிருந்து தான் இஸ்லாமியவாதம் - முஸ்லிம் சகோதரத்துவம் என்னும் அரசியல் அமைப்பின் வடிவத்தில்- பிற நாடுகளுக்கும் பரவியது. அந்த இஸ்லாமியவாதத்தின் மிகத்தீவிர வடிவங்களை சவூதி அரேபியா போன்ற ஏகாதிபத்திய அடிவருடி நாடுகள் சுவீகரித்துக் கொண்டன.அந்த நாடுகளின் ஒடுக்குமுறை ஆட்சிகள் இஸ்லாத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டன. எனினும் எகிப்திலுள்ளமுஸ்லிம் சகோதரத்துவம்' அமைப்பின் தலைமையின் கீழ் தற்போதைய  மக்கள் கிளர்ச்சிகள் தொடங்கவில்லை - அவற்றுக்கு அந்த அமைப்பு ஆதரவு கொடுத்தபோதிலும்.


               புரட்சி என்பது வெகுமக்களின் திருவிழா என்னும் லெனினின் புகழ்பெற்ற சித்தரிப்பை உறுதி செய்வதாக இருந்தது எகிப்திய மக்களின் பேரெழுச்சி. அந்தப் புரட்சி எந்தத் திசையில் செல்லும் என்பதைத் தற்போது உறுதிசெய்ய முடியாவிடினும் அரபு உலகின் முன்னுவமை இல்லாத இந்தத் தருணத்தைக்  கொண்டாடுவோம் என்றார் நோம் சோம்ஸ்கி. உலகப் புகழ்பெற்ற எகிப்தியப் பெண்ணிய எழுத்தாளரும் மருத்துவருமான எண்பது வயது  நவால் அல சடாவி தனக்கு இருபது வயது குறைந்துவிட்டது போன்ற உணர்வை அந்தப் புரட்சி தருவதாகக் கூறினார். எல்லாப் புரட்சிகர காலகட்டங்களிலும் நிகழ்வது போலவே, எகிப்திலும் மக்களின் படைப்பாற்றல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஆடல்கள், பாடல்களுடன் புதுமையான முழக்கங்களும் சுவரோவியங்களும் எகிப்தியத் தெருக்களை  நிரப்பின. கொடுங்கோலன் முபாரக்கை எதிர்த்து தீரமிக்க முழக்கங்கள் மட்டும் எழுப்பப்படவில்லை. அவரை எள்ளி நகையாடும் ஏராளமான நகைச் சுவைத் துணுக்குகள் நாடெங்கும் பரவின. மாதிரிக்கு இரண்டு:


1. ஒபாமா, விளாடிமிர் புட்டின், முபாரக் ஆகியோர் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கடவுள் திடீரென அங்கு வந்துஉலகம் இன்னும் இருநாட்களில் அழியப்போகிறது. இதை உங்கள் மக்களிடம் சொல்லுங்கள்' என்கிறார். அடுத்தநாள், அமெரிக்கத் தொலைக் காட்சியில் பேசிய ஒபாமா, 'என்னருமை அமெரிக்க மக்களே, உங்களுக்கு  ஒரு நற்செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் உள்ளன. ஒன்று கடவுள் இருக்கிறார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். மற்றொன்று, உலகம் இன்னும் இருநாட்களில்  அழியப்போகிறது'. விளாடிமிர் புட்டின் ரஷியத் தொலைக்காட்சியில் ரஷிய மக்களிடம் கூறினார்: ‘ரஷிய மக்களே, உங்களுக்கு இரு கெட்ட செய்திகளைச் சொல்ல வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன். ஒன்று, கடவுள் இருக்கிறார் என்பது; இதன்  பொருள், சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதியில்  நாம் நம்பி வந்தவை எல்லாம் பொய் என்பதாகிவிட்டது; இரண்டு, உலகம் இரு நாட்களில் அழியப்போகிறது. முபாரக், கெய்ரோ தொலைக்காட்சியில் எகிப்திய மக்களிடம் கூறினார்: ‘,எகிப்தியர்களே! இரண்டு நற்செய்திகளுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். ஒன்று, கடவுளும் நானும் இப்போதுதான் ஒரு உச்சி மாநாட்டை நடத்தியுள்ளோம் என்பது. இரண்டு, உலகம் உள்ள வரை நான்தான் உங்கள் குடியரசுத் தலைவராக இருப்பேன் என்று கடவுள் என்னிடம் கூறினார்'.


2.எகிப்தின் உள்துறை அமைச்சர் மக்களிடமிருந்து விடைபெறும் கடிதமொன்றை எழுதுமாறு முபாரக்கிடம் கூறுகிறார். முபாரக் கேட்கிறார்: ”மக்கள் எங்கே செல்கிறார்கள்?”.


உலகம் உள்ளவரை இல்லாவிட்டாலும், தனது ஆயுள் உள்ளவரையிலாவது- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் துணையுடன்- எகிப்தின் அதிபராக இருக்க விரும்பிய முபாரக்கை, எகிப்தியப் புரட்சி தோன்றிய பிறகும்கூட  நமது விசுவாசமான நண்பர் '‘குடும்ப உறுப்பினர்' என்றழைத்து வந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன். ‘மத்தியக் கிழக்கில் மிகவும் வலிமையான சக்தி, நன்மைக்கான சக்தி' என்று அவரைப் பாராட்டி வந்தார் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேய்ர்.


டுனீஷியாவின் பென் அலியின் கதி முபாரக்குக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது அமெரிக்கா. முபாரக் தூக்கியெறியப்படும் நிலை ஏற்படுமானால், இராணுவத் தலையீடு மூலமாகவாவது அதைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தார் இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெதன்யாஹு. அரபு நாடுகளி டமிருந்து கைப்பற்றிய பிரதேசங்களை அவற்றிடம் ஒப்படைத்துவிட வேண்டும், அவற்றுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்னும் பேச்சு எழும்போதெல்லாம், ‘ஜன நாயகம் இல்லாத, அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற அரபு நாடு களுக்கு சலுகைகள் கொடுப்பது சாத்தியமில்லை' என்று பேசி வந்த இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், எகிப்தில் ஜனநாயக ஆட்சி ஏற்படும்அபாயம்' ஏற்பட்டுவிட்டதாகக் கூறத் தொடங்கினர். எகிப்தில்  பூர்ஷ்வா நாடாளுமன்ற ஜனநாயக முறை ஏற்பட்டால், எகிப்து பாலஸ்தீனத்தின் ஒற்றுமைக்காகவும் விடுதலைக்காகவும் பாடுபடும், இஸ்ரேலால் வெறுக்கப்படும் ஹிஸ்பொல்லாவுடனும் ஹமாஸுடனும் (இவை இரானால் உருவாக்கப்பட்ட சக்திகள் என இஸ்ரேல் கருதுகிறது) இரானுடனும் நட்புப் பாராட்டத் தொடங்கும், தேர்தல்களில் முஸ்லிம் சகோரத்துவம் போன்ற இஸ்லாமியச் சக்திகள் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் இஸ்ரேலுடன் எகிப்து செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தை (டேவிட் முகாம் ஒப்பந்தம் எனக் கூறப்படுவது) இரத்து செய்துவிடுவர், அப்படி இரத்து செய்வதற்கு, இப்போது கெய்ரோத் தெருக்களில் கூடியிருக்கும் கும்பலும் ஒப்புதல் தந்துவிடும் என்றெல்லாம் கூறத் தொடங்கினர். ‘யெடியோட் அஹ்ரோனோட்' என்னும் இஸ்ரேலியப் பத்திரிகையில் ஒருவர் வெளிப்படையாகவே எழுதினார்: 'இப்போது இஸ்ரேலை ஜனநாயகம் என்னும் பீதி கவ்வியுள்ளது. இங்கு ஏற்படும் ஜனநாயகமல்ல, அண்டை நாடுகளில் ஏற்படும் ஜனநாயகம்'
உண்மையில், ‘முஸ்லிம் சகோதரத்துவம்'அமைப்புக்கு எகிப்திய -இஸ்ரேலிய சமாதான ஒப்பந்தத்தை இரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும் எகிப்தில் ஜனநாயக ஆட்சி ஏற் பட்டு, தாங்கள் அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அந்த ஒப்பந்தம் தொடர்ந்து மதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பகிரங்கமாக அறிவித்தனர். ஐநா.வின் அணுச்சக்தி முறைமைப்படுத்தும் முகாமையின் (United Nations’s Atomic Energy Regulatory Agency) முன்னாள் தலைவர் எல்-பராடெய் போன்ற எகிப்திய மிதவாதிகள்கூடஇடைக்கால அரசாங்க'மொன்றில் பங்கேற்பதை இஸ்ரேலும், அமெரிக்காவிலுள்ள ஜியோனிஸ்ட் சக்திகளும் விரும்பவில்லை. ஏனெனில், இராக்கில்பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள்' இல்லை என்பதை அங்கு ஐநா. சார்பில் அனுப்பப்பட்டிருந்த குழுவிலிருந்த எல்-பராடெய்  கண்டறிந்து ஜார்ஜ் புஷ்ஷின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை அம்பலப்படுத்தியிருந்தார்; இரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா செய்யும் முயற்சிகளைக் கண்டனம் செய்தார்; பாலஸ்தீன காஸா பகுதியை முற்றுகையிட்டு, அங்குள்ள மக்கள் பட்டினியால் சாகும்படி செய்யும் இஸ்ரேலின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளுக்கு முபாரக்கின் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு தந்துவருவது, ‘ஒவ்வொரு எகிப்தியனின், ஒவ்வொரு அராபியனின், ஒவ்வொரு மானுட ஜீவியின் நெற்றியில் பொறிக்கப்பட்ட அவமானச் சின்னம்' என்று கண்டனம் செய்தார்.


எனினும், எகிப்தின் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய, அடிப்படையான சமூக மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஆற்றலோ, விருப்பமோ முஸ்லிம் சகோரத்துவத்திற்கோ, எல்- பராடெய் போன்ற மிதவாதிகளுக்கோ இல்லை. அப்படியிருந்தும் அவரைப் போன்ற மிதவாதிகள் கூட ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர், இருக்கின்றனர் ஜியோனிஸ்டுகள்.

0 comments:

Post a Comment

இனிதே துவங்கி உள்ளது. வாழ்த்துக்கள்